காவிரி ஆணையத்தில் தமிழகத்துக்கு தேவையான நீரை அரசு கேட்டு பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

194 0

ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தடையில்லாமல் அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டதில் தமிழகத்திற்கு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு அளிக்க வேண்டிய 30.6 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசு காலதாமதம் இல்லாமல் உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

மேகதாது அணை பற்றிய பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அதுபற்றி பேசக்கூடாது என்று தமிழக அரசின் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மேலும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை உரிய நேரத்தில், உரிய அளவை முறையாக பெறுவதற்கான தொடர் முயற்சியை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அழுத்தம் கொடுத்ததால் தான் தமிழகத்திற்கான தண்ணீரை அளிக்க முன் வருகிறது. இந்த நிலை மேலும் தொடராமல் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தடையில்லாமல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.