தலிபான்கள் வசமானதா ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணம்?

205 0

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், அங்கு புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்  பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதையடுத்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலிபான்களால் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருலே சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் உயிர்சேதம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் வட்டாரம் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், இதை நிராகரித்துள்ள அம்ருல்லா சாலே, எதிர்ப்பு தொடர்வதாகவும், எனது இடத்தில், எனது இடத்திற்காகவும் அதன் கண்ணியத்தைக் காக்கவும் நான் இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அம்ருல்லா சாலேவின் மகன் எபதுல்லா சாலேவும், தலிபான்கள் கைப்பற்றியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.