தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு

277 0

குரான் மற்றும் ஷரியா சட்டப்படி பெண்கள் மந்திரிகளாக இருக்க முடியாது. அதன்படி ஆப்கானிஸ்தானின் புதிய அரசிலும் பெண்கள் இடம் பெறமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து சென்றுள்ளன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளும் நாடு திரும்பி விட்டன.

இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தலிபான்கள் முடுக்கி விட்டு உள்ளனர்.

இதில் புதிய அரசு குறித்த ஆலோசனைகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாகவும், மந்திரிசபை குறித்த விவாதங்களும் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தலிபான் தகவல் மற்றும் கலாசார கமிஷனின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான முப்தி இனாமுல்லா சமங்கானி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசு குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு கட்டமைப்பில் ஈரானை பின்பற்ற தலிபான்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அதிகாரமிக்க (உச்சபட்ச) தலைவர், அதிபர் என இரு பதவிகளை உருவாக்கி உள்ளனர்.

ஈரானில் உச்சபட்ச தலைவர்தான் நாட்டின் அரசியல் மற்றும் மத அமைப்பின் தலைவராவார். அவரது மேற்பார்வையின் கீழ்தான் அதிபர் செயல்படுவார்.

அதிபருக்கு மேல் அதிகாரம் படைத்த இவர்தான், ராணுவம், அரசு, நீதித்துறை ஆகியவற்றுக்கான தலைவர்களை நியமிப்பார். அரசு, ராணுவம் மற்றும் நீதித்துறையில் இறுதி முடிவை உச்சபட்ச தலைவர்தான் எடுப்பார்.

அந்தவகையில் தலிபான்களும் தங்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவரான முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடாவை (வயது 60) தேர்ந்தெடுத்து உள்ளனர். இவர் காந்தஹாரில் இருந்து செயல்படுவார்.

இதைப்போல தலிபான்களின் அரசு கட்டமைப்பில் மாகாணங்களுக்கு கவர்னர்களும், மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கவர்னர்களும் தலைவராக இருப்பார்கள்.

இந்த கவர்னர்கள், போலீஸ் தலைவர்கள் மற்றும் மாகாண, மாவட்ட கமாண்டர்களை தலிபான்கள் ஏற்கனவே நியமித்து உள்ளனர். அதேநேரம் புதிய நிர்வாக அமைப்புக்கான பெயர், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தானின் புதிய மந்திரிசபையில் பெண்களுக்கு இடமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாகித் இத்தாலி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஆப்கானிஸ்தான்

தேசிய ஒற்றுமைக்கான ஒரு புதிய அரசை நாங்கள் வெகு விரைவில் அமைப்போம். மிகச்சிறிய அளவில் அரசை அமைக்க விரும்புகிறோம். அதாவது முந்தைய அரசில் இடம் பெற்றிருந்த மந்திரிகளின் எண்ணிக்கையில் பாதியளவுக்கே மந்திரிகளை வைத்திருப்போம்.

குரான் மற்றும் ஷரியா சட்டப்படி பெண்கள் மந்திரிகளாக இருக்க முடியாது. அதன்படி ஆப்கானிஸ்தானின் புதிய அரசிலும் பெண்கள் இடம் பெறமாட்டார்கள்.

ஆனால் அமைச்சகங்கள், போலீஸ் மற்றும் கோர்ட்டுகளில் உதவியாளர்களாக அவர்கள் பணியாற்ற முடியும். ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தடை விதிக்க முடியாது.

பஞ்ஷிர் மாகாணத்தில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்டு வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் தரவில்லை.

சர்வதேச உறவுகளை பொறுத்தவரை, சீனாவை எங்கள் முக்கியமான கூட்டாளியாக பார்க்கிறோம். ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவும், நாட்டை மறுகட்டமைக்கவும் சீனா தயாராக இருக்கிறது.

சீனாதான் சர்வதேச சந்தைகளில் எங்களின் நுழைவுச்சீட்டு.

அதேநேரம் ரஷியாவுடனான உறவுகளும் மோசமடையவில்லை. ஏனெனில் அந்த நாடு இந்த பிராந்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாஸ்கோவுடனான உறவுகள் பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது. மேலும் சர்வதேச அமைதிக்கான சூழல்களை உருவாக்க ரஷ்யா பங்களிக்கிறது.

இவ்வாறு சபியுல்லா முஜாகித் தெரிவித்தார்.

இதைப்போல ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நட்புறவை பேண தலிபான்கள் விரும்புவதாக தோகாவில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத்தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.