யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார்.
விசேட தேவையுடையவரான பிரகாஷ் ஞானப்பிரகாசம், தனது தன் நம்பிக்கை மூலம் இணைய செய்தி உலகில் புகழ்பெற்ற பதிவாளராக காணப்பட்டார்.
அத்தோடு பத்திரிகைகளில் விளையாட்டு செய்திகள், கட்டுரைகளையும் நேர்த்தியாக எழுதும் திறனுடையவராக இளைஞர்கள் ஊடகத்தின் பக்கம் நம்பிக்கை கொள்ளும் வகையில் செய்தி அறிக்கையிடலையும் வழங்கினார்.
அரிய நோயினால் பாதிக்கப்பட்டபோதும் துவண்டுவிடாது தான் எதிர்கொண்ட நோயின் தாக்கங்கள் மற்றும் அதன் விழிப்புணர்வு தகவல்களை தனது தனிப்பட்ட தேடலின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.
சாமானிய மனிதர்கள் முதல் பதவிநிலை உயர் அதிகாரிகள் வரை மிக நெருக்கமாக செய்திகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குபவராக காணப்பட்டார்.
உதயன்,தினக்குரல் போன்ற அச்சு ஊடகங்களிலும் பல இணைய ஊடகங்களிலும் செய்தி பதிவேற்றுனராக பணியாற்றினார்.
கடந்த சிலநாட்களாக நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று தொடர்பில் அவரே தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
மீண்டும் வந்தால் சந்திப்பேன் என கூறியவர் இன்று காலமானார்.