துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க நடந்த கலகத்தை அடுத்து, கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சிக்கான முயற்சி, பொதுமக்களால் முறியடிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற மோதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்ட நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் நீதிபதிகளை சுற்றி வளைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. அதற்கு வசதியாக 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பத்திரிகை மற்றும் இதர ஊடகங்களின் செய்திகளை தணிக்கை செய்யவும், தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமலேயே சில முக்கிய சட்டங்களை இயற்றவும் இந்த அவசரநிலை சட்டம் பிரதமருக்கு தனிஅதிகாரத்தை வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
பிரதமர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் புரட்சிக்கு சதி திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ துணை தளபதிகள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்துவரும் நிலையில் இதற்கு வசதியாக அவசரநிலை சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க அரசு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக நேற்று துருக்கி பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. பாராளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வரும் 19-ம் தேதியுடன் முடிவடையை இருந்த இந்த அவசரநிலை பிரகடன உத்தரவு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.