மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்

291 0

201701040821470133_thirumavalvan-says-tamil-nadu-government-should-act_secvpfமத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், இந்தியாவின் கல்வி தாய், சாவித்ரி பாய் பூலேவின் 186-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதன் முதலாக பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு என பள்ளிக்கூடத்தை நிறுவியவர் சாவித்ரி பாய் பூலே. அவரது பிறந்தநாளான இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம், பா.ஜ.க.வின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும், சாவித்ரி பாய் பூலேவின் நினைவு சுடரை ஏந்தி பரப்புரையில் ஈடுபட உள்ளது.

சென்னையில், 21-ந்தேதி புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும் வகையில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காக போராடிய மாணவர் ரோகித் வெமுலாவின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவ படம் திறந்து வைக்கப்படும்.

சாதியின் பெயரால், மதங்களின் பெயரால், மற்றும் மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் அரசியல் கட்சிகள் வாக்குகளை சேகரிக்க கூடாது. தேர்தல் பரப்புரையில் சாதி, மதம் ஆகிய உணர்ச்சிகளை தூண்ட கூடாது என சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும் போதே, மத்திய அரசின் சில திட்டங்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்தவுடன் எங்கள் அச்சத்தையும், கண்டனத்தையும் தெரிவித்தோம். அப்போதே கருத்து கூறும் போது, மத்திய அரசு தமிழக அரசின் ஆட்சி, நிர்வாகத்தில் தலையிடுகிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி தொடர்பான மசோதாவிற்கு ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்றவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு தமிழக அரசை நெருக்குகிறது என முதலில் சுட்டி காட்டிய கட்சி விடுதலை சிறுத்தைகள் தான்.

அந்த அச்சத்தில் தான் மறுபடியும் சொல்கிறேன், மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அச்சப்படாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும். குறிப்பாக புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு நிதான முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.