பதுளை மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி!

174 0

பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த சில்வா தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தில் பங்கேற்ற தாம், மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் நிலைமை குறித்து வினவியதற்கு பதிலளிக்கும் போதே மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கண்ட விடயத்தை கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அரவிந்தகுமார்…

பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

நெருக்கமான குடியிருப்புகளால் தொற்று ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும். அவ்வாறு எவருக்கேனும் தொற்று ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் உறுதியளித்தார்.

அத்துடன் பெருந்தோட்டங்களில் வாழும் முதியவர்களிடம் வயதை கணக்கிடக் கூடிய ஆவணங்கள் இல்லை எனவும், எனினும் அந்தந்த பகுதி கிராம உத்தியோகத்தர்கள் அவ்வாறானவர்களின் அணுமான வயதை உறுதிப்படுத்துவது போதுமானது எனவும் அவர் இதன் போது கூறினார்.