ஹொரவப்பொத்தானை கலகம், 16 இராணுவத்தினர் கைது!

279 0

brig-roshan-seniviratne-380-seithyஹொரவப்பொத்தானையில் கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி கலகம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 16 சிறீலங்கா இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஹொரவபொத்தானையில், புத்தாண்டை முன்னிட்டு, கடந்த டிசெம்பர் 31ஆம் நாள் இரவு இசை நிகழ்ச்சி இடம்பெற்ற போது இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் நடந்தது.

இந்த மோதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேரை சிறீலங்கா காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர். இதில் ஒரு இராணுவவீரரும் அடங்கியிருந்தார்.

கைது செய்யப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் நேற்று முன்தினம் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமது இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹொரவபொத்தானை இராணுவ முகாமைச் சேர்ந்த 5 ஆவது கஜபா படைப்பிரிவு இராணுவத்தினர் நகரில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி கலகம் விளைவித்தனர்.

கலகம் விளைவித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 16 சிறீலங்கா இராணுவத்தினர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹொரவபொத்தானை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் தர அதிகாரி உடனடியாகவே அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இராணுவ முகாமில் பணியாற்றிய அனைத்து இராணுவத்தினரும் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.