கூடலூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

180 0

கூடலூர் அருகே இன்று காலை கிராமத்துக்குள் புகுந்து வீட்டை தாக்கி சேதப்படுத்திய யானைகள் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்களை நாசம் செய்து விட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வனப்பகுதிக்குள் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகளவில் காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றிவருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது கிராமபகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே அந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டு யானைகள் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஓடக்கொல்லி பகுதியில் இன்று அதிகாலையில் புகுந்தன. அங்கு யானைகள் அந்த பகுதியில் உள்ள ஜார்ஜ் குட்டி என்பவர் வீட்டையும், வெள்ளச்சி என்பவர் வீட்டையும் அடித்து நொறுக்கியது. யானை வந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டுக்குள் ஓடி தஞ்சம் அடைந்தனர். வீட்டை தாக்கி சேதப்படுத்திய யானைகள் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்களை நாசம் செய்து விட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- காட்டு யானைகள் நாங்கள் வசிக்கும் பகுதிகளில் முகாமிட்டிருப்பதால் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை இடித்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் யானைகள் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுவதால் உயிருக்கு உத்தரவாதம் இன்றி வாழ வேண்டியுள்ளது. இதனால் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளைஅடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.