பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள 9 அணைகளும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

204 0

தென்மேற்கு பருவமழை காலங்களில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு சோலையாறு அணை முதலில் நிரம்பியது.

பரம்பிக்குளம்- ஆழியாறு எனப்படும் பி.ஏ.பி. திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டு நீர்பகிர்மானம் நடைபெற்று வருகிறது.

பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அணைகள் தென்மேற்கு பருவமழை காலங்களில் நிரம்பி விடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு சோலையாறு அணை முதலில் நிரம்பியது.

அதற்கு பிறகு ஆழியாறு அணை நிரம்பியது. பரம்பிக்குளம் அணை நிரம்பும் நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று 70 அடி உயரத்தை தாண்டியது. மொத்த உயரம் 72 அடியாக இருந்தாலும் அணையின் பாதுகாப்பு கருதி 70 அடி உயரத்துக்கும் மேல் நீர்வரத்து ஏற்பட்டால் உபரிநீர் வெளியேற்றப்படும்.

பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகள் நிரம்பியதன் மூலம் ஓராண்டுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்க முடியும்.

பரம்பிக்குளம்- ஆழியாறு (பி.ஏ.பி.) திட்டத்தின் முக்கிய அணைகளின் நீர் இருப்பு விவரம் வருமாறு:-

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 160 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 2680 கன அடி, வெளியேற்றம் 2146 கன அடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 70.38 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 2621 கன அடி, வெளியேற்றம் 967 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 118.55 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 253 கன அடி, வெளியேற்றம் 253 கனஅடி.

திருமூர்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 49 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 962 கன அடி, வெளியேற்றம் 931 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 88.49 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 1729 கன அடி, வெளியேற்றம் 1865 கன அடி.