சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் பலி- கணவர் கைது

207 0

ரேவதி மீது திராவகம் வீசும்போது அவருடைய தாய் ஆராயி மீது பட்டதில் அவரும் காயம் அடைந்தார்.

சேலம் குகை ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 52). இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (47). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் தகராறின்போது மனைவியை ஏசுதாஸ் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி, பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.

இதற்கிடையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவன் ஏசுதாஸ் மீது புகார் கொடுப்பதற்காக நேற்று ரேவதி, தனது தாய் ஆராயி (65) என்பவருடன் சேலம் டவுன் போலீஸ் நிலையம் வந்தார்.

இதையடுத்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மாலை 5.30 மணி அளவில் தாயுடன், ரேவதி சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் பஸ்சுக்காக ராசிபுரம் வழித்தடத்தில் நின்று கொண்டிருந்தனர். மனைவி சேலம் வந்திருப்பதை அறிந்த ஏசுதாஸ் சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். மேலும் அவர், 5 லிட்டர் கேனில் மறைத்து வைத்து கொண்டு வந்த திராவகத்தை எடுத்து திடீரென மனைவி ரேவதியின் உடலில் ஊற்றினார். இதனால் உடல் வெந்தநிலையில் படுகாயத்துடன் வலியால் அவர் பஸ் நிலையத்துக்குள் அங்கும், இங்குமாக ஓடி அலறி துடித்தார். இதையடுத்து ஏசுதாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை பார்த்து பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ரேவதி மீது திராவகம் வீசும்போது அவருடைய தாய் ஆராயி மீது பட்டதில் அவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ரேவதி, ஆராயி ஆகியோரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் ஏசுதாஸ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.