சிவகங்கை அருகே உணவுக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் கிராமத்துக்கு பிரதமர் பாராட்டு

217 0

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதை பாராட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி ஆகிய பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் ஆகிய உணவுக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பிறகு அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகின்றனர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறுகிறது. பிறகு அதன் மூலம் ஜெனரேட்டரை இயக்கி 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கின்றனர்.

இதில் கிடைக்கும் மின்சாரத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகளில் பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து ஊராட்சித் தலைவர் மணிமுத்து கூறியதாவது: பிரதமர் மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தை ஆக.10-ல் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் தினமும் 100 கிலோ உணவுக் கழிவு கிடைக்கிறது. இது தவிர சிவகங்கை நகராட்சி பகுதியில் இருந்தும் பெறுகிறோம்.

உற்பத்தியாகும் மின்சாரத்தை 20 தெரு விளக்குகள், மின்சாரக் குப்பை வாகனங்களில் பயன்படுத்துகிறோம் என்றார்.