தலிபான், ஹக்கானி இரண்டு தனித்தனி அமைப்புகள்: அமெரிக்கா அறிவிப்பு

198 0

தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் இரண்டு தனித்தனி அமைப்புகள், இரண்டையும்  ஒன்றாக அமெரிக்கா பார்க்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில், ‘‘இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை நாங்க மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம்’’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் மீது அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது

இதுகுறித்து மத்திய கமாண்டின் கேப்டன் பில் அர்பன், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். டார்கெட்டை முடித்துவிட்டோம். நிச்சயமாக இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:

ஹக்கானி அமைப்பை அமெரிக்கா 2012-ம் ஆண்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தலிபான்களுடன் பகிரப்படவில்லை.

தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் இரண்டு தனித்தனி அமைப்புகள். தனித்தனி செயல்பாடு கொண்டவை. இரண்டையும் ஒன்றாக அமெரிக்கா பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

தலிபான்களும் ஹக்கானி நெட்வொர்க்கும் வலுவான தொடர்புகள் இருப்பதை அமெரிக்க மறுத்தாலும் இரு அமைப்களுக்கும் தொடர்பு இருப்பதாக நேட்டோ உள்ளி்ட்ட மற்ற நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்கா, கூட்டணி மற்றும் ஆப்கன் படைகளை குறிவைக்கும் மிகவும் ஆபத்தான தீவிரவாத குழு ஹக்கானி நெட்வொர்க் என தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.