‘‘ஒரு கோடி கரோனா தடுப்பூசி; இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை கடந்துவிட்டது’’- பில் கேட்ஸ் புகழாரம்

173 0

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை பாராட்டியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை கடந்துவிட்டது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50% மக்களுக்கு முதல்டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுபோலவே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக ஆகஸ்ட் 28 அன்று இந்தியா நல்ல செய்தியை பதிவு செய்துள்ளது. ஒரு நாளில் (ஆகஸ்ட் 27) 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை செலுத்தியதற்காக சர்வதேச நாடுகளின் பாராட்டுகளை இந்தியா பெற்றது. இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை கடந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோலவே உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் இதுகுறித்து கூறுகையில் ‘‘பயிற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்களுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவில் இன்று 2 மாதங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான தினசரி கரோனா நோய் தொற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவில் பாதிக்கும் அதிகமான தொற்று எண்ணிக்கை உள்ளது.