சர்வதேச செவித்திறன் குன்றியோருக்கான நீளம் தாண்டும் போட்டியில் குமரி வீராங்கனை சாதனை: 2024-ல் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிக்கு தகு

185 0

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சேர்ந்த முஜீப், சலாமத் தம்பதி மகள் சமீஹா பர்வீன்(18). காதுகேட்கும் திறனற்ற இவர், செவித்திறன் குன்றியோருக்கான நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் என, தேசிய தடகள போட்டிகளில் 11 தங்கப்பதக்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். போலந்து நாட்டில் நடந்த சர்வதேச செவித்திறன் குன்றியோருக்கான தடகள போட்டியில் பங்கேற்க தேர்வானார். இதற்காக டெல்லியில் நடந்த தகுதித் தேர்வின்போது மாணவர்கள் பலர் இருந்தபோதும், மாணவிகள் வேறு யாரும் தேர்வாகாததால் அவரை போலந்து அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு நபருக்காக பயிற்சியாளர்களுடன் குழுக்களை அனுப்ப தயங்கி, சமீஹா பர்வீன் நிராகரிக்கப்பட்டார். இதனால் வேதனை அடைந்த அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீஹா பர்வீன் போலந்து போட்டியில் பங்கேற்க விளையாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் ஒரு வார பயிற்சிக்கு பின்னர் சமீஹா பர்வீன் போலந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு நீளம் தாண்டும் போட்டியில் சமீஹா பர்வீன் 4.94 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பெற்றார். இந்த போட்டி விதிகளின்படி முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்து நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் தங்கள் நாடுகளின் சார்பில் பங்கேற்பார்கள். அதன்படி சமீஹா பர்வீன் 2024-ம் ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.