ஒரு மணித்தியாலத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன!-விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

232 0

இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன. இவ்வாறு அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை அல்ல. . இதனடிப்படையில் அவதானிக்கும்போது இலங்கை உண்மையில் அதிக அவதான நிலையிலேயே உள்ளது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இலங்கை உண்மையில் அதிக அவதான நிலையிலேயே உள்ளது. மணித்திலாயத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன.

அதனடிப்படையில் மணித்தியாலயத்திற்கு இவ்வாறு அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை கட்டுப்படுத்தக் கூடிய நிலைமை அல்ல.

எனவே வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து மக்கள் தெளிவு பெறுவது அத்தியாவசியமானதாகும்.

டெல்டா வைரஸ் கொழும்பிலேயே பரவ ஆரம்பித்தது. தற்போது மிகவும் வேகமாக ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருப்பது இந்த வைரஸாகும்.

டெல்டா வைரஸ் திரிபடைந்து புதிய மாறுபாடுகளும் வேகமாக பரவி வருகின்றன. கொழும்பில் 100 சதவீதம் டெல்டா பரவியுள்ளது. இவற்றில் அதிகளவாகக் காணப்படுவது இந்த புதிய மாறுபாடாகும்.

உலக சுகாதார ஸ்தாபனம் ஏனைய நாடுகளின் உதவியோடு கொவிட் தொடர்பான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருகிறது

அதற்கமையவே செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7,500 உயிர்களைக் காப்பற்ற முடியும் என்றும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10,000 உயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நாம் நேற்றைய தினமும் சுட்டிக்காட்டியிருந்தோம். எனவே குறிப்பிட்ட கால வரையறைக்கு நாடு முடக்கப்படுமானால் தொற்று பவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.