கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உதவத் தயார் – கட்டார் தூதுவர்

182 0

கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிலிருந்தும் உயர் மட்ட அரச விஜயங்களால் வலுவூட்டப்பட்ட கட்டார் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த அமைச்சர் , பொருளாதார வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

துறைமுக நகர விஷேட பொருளாதார வலயம், சர்வதேச நிதி நிலையம், சுற்றுலாத் துறை மற்றும் எரிசக்தித் துறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை ஆராய்வதற்காக தூதுவர் சொரூருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

அமைச்சரின் கருத்துக்களை வரவேற்ற தூதுவர் சொரூர், தனது நேர்மையான பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.