பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் ரூ.2000 கொடுப்பனவு வழங்கப்படும்!

191 0

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்த பதினேழு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப் படுத்தும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது 2,000 ரூபா கொடுப்பனவுகள் வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பல கிராம சேவகர்கள் பிரிவுகளில் நேற்று 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கலில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை குறித்து தெரிவிக்ககும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 1,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு சில கிராம சேவகர் பிரிவுகளில் 3,000 தொடக்கம் 4,000 குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் பெரும் பாலும் 500 தொடக்கம் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 200 தொடக்கம் 250 பேருக்கு மாத்திரம் தான் அனுமதி கிடைத்துள்ளன.

ஆகவே பலர் கிராம சேவகர்களிடம் முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளன. எனவே இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.