கொரோனா தொடர்பான தகவல்களை வழங்கமுடியாது – வவுனியா அதிகாரிகள்

264 0

வவுனியா மாவட்டத்தின் கொரோனா நிலமைகள் தொடர்பாக உத்தியோக பூர்வமான தகவல்களை ஊடகங்களிற்கு வழங்க முடியாது என வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (28) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட பொது அமைப்பினர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் இறப்படைபவர்கள் தொடர்பான உத்தியோக பூர்வமான தகவல்களை ஊடகவியலாளர்களிற்கு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. அதனை மறுத்த அதிகாரிகள் அவ்வாறு தகவல்களை வழங்குவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும் மீறி வழங்கினால் தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவோம் என்றும் தெரிவித்தனர்.

ஆயினும் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஊடக சந்திப்புக்களின் மூலம் மாவட்டத்தின் கொரோனா நிலமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் அவ்வாறான தகவல்களை வழங்கமுடியாது என்று வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பான உத்தியோக பூர்வமான, உண்மையான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.