வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

359 0

vavu-nelவவுனியா அரசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசி ஆலை களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளனர்.

வவுனியா – பாவற்குளம் படிவம் 6 களஞ்சியசாலையிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பாவற்குளம் படிவம் 6 நெற்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லை தென் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக லொறிகள் வந்திருந்த நிலையிலேயே இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியசாலையிலுள்ள நெல்லை மாவட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்க வேண்டும் அல்லது அவற்றை குற்றி மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமது பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செயய வேண்டும் என வலியுறுத்தியே இந்த முற்றுகை போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தமக்கான தேவையை பூர்த்தி செய்யுமாறு குறித்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நெல் இன்மையினால் சுமார் 30 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அத்துடன், குறித்த அரிசி ஆலைகளில் பணியாற்றிய சுமார் 500ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென் பகுதிக்கு அனுப்பும் நெல்லை, வவுனியாவிலுள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்கி, தமது பிரதேசத்திற்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தென் பகுதிக்கு நெல்லை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.