நோயாளர்களுக்கான மருந்து மீண்டும் தபால் மூலம்

185 0

அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன.

மருந்துகள் தேவைப்படும் நோயாளர்கள் தாம் சிகிச்சை பெற செல்லும் வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தேவையான தகவல்களை வழங்கி மருந்துகளை வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிக்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொலைபேசியின் ஊடாக வழங்கப்படுகின்ற தகவல்களுக்கு அமைய குறித்த நோயாளர்களின் வீடுகளுக்கே மருந்துகள் விநியோகிக்கப்படும். தற்போது நோயாளர்களுக்கு மருந்துகள் விநியோகிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கள மொழியில் 0720720720 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், தமிழ் மொழியில் 0720 60 60 60 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற வைத்தியர் சம்பிக்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ​​சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்ததமை குறிப்பிடத்தக்கது.