திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த சம்பவமானது யுத்தக் காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவம் என கூறப்பட்டு வருவதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் இலங்கையில் இடம்பெற்றமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்றி இந்த மாணவர்கள், உயர்தர பரீட்சையை நிறைவு செய்து, பெறுபேறுகளை எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி குறித்த மாணவர்கள் திருகோணலை கடற்கரை பகுதிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், முச்சக்கரவண்டியொன்றில் வந்த ஆயுததாரிகள் இந்த மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர்.
அதன்பின்னர் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் குறித்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தககது.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படாத நிலையில், 2013ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிபடையைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 12 பேர்ம குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களில் ஒருவரது குடும்பத்தை தவிர்த்து ஏனைய குடும்பங்களை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் தமது பாதுகாப்பு கருதி வெளிநாடுகளுக்கு சென்று வாழ்த்து வருவதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.