பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட நிவாரணப்பொதியை அரசாங்கம் பறித்துள்ளது – சஜித்

239 0

பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிவாரணப்பொதியை அரசாங்கம் பறித்துள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியை அரசாங்கம் தற்போது தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் நிவாரணப்பொதியை குறிப்பிட்ட சிலருக்கு மட்டு;ப்படுத்தும் நடவடிக்கை அரசாங்கத்தின் மனிதாபிமானத்தின் அளவை வெளிப்படுத்துகின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது தேவைகளிற்காக மக்களின் கழுத்தை திருகுவதற்கு தயங்காத அரசாங்கம் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை பழிவாங்க துணிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உணவு கிடைப்பதன் அடிப்படையில் உலகில் ஐந்து வறிய நாடுகளில் ஒன்று என்ற நிலைக்கு நாட்டை இட்டுச்சென்றுள்ள அரசாங்கம் மக்களை தியாகம் செய்யுமாறு கோருகின்றது- இலங்கையில் மக்கள் தங்கள் சம்பளத்தின் 66 வீதத்தினை உணவிற்காக செலவிடவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.