அ.தி.மு.க. தொழிற்சங்க தேர்தலுக்கு தடை இல்லை- ஐகோர்ட்டு உத்தரவு

274 0

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஏற்கனவே 2 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர் முனுசாமி தொடர்ந்த வழக்கில், ‘அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் உள்ளதால், இந்த தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், அ.தி.மு.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், ‘கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஏற்கனவே 2 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. சங்க விதிகளின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தொழிற்சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தேர்தலுக்கு தடைவிதிக்க கூடாது’ என்று வாதிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தலுக்குத் தடை விதிக்காமல், வழக்கின் விசாரணையை 2 வார காலத்துக்குத் தள்ளிவைத்தார்.