500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!

213 0

கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இப்பந்தீவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி இயந்திரப் படகு ஒன்றை கடற்படையினர் பரிசோதனை செய்தனர். இதன்போது அந்த படகில் 15 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்ட 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி இயந்திரப் படகு என்பன உரிய சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த வாரம் மட்டும் 1520 கிலா கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ம் திகதி கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19ம் திகதி இப்பந்தீவு பகுதியில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.