இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.
ஜெர்மனி நாட்டில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் ஊழல் செய்து பண ஆதாயம் அடைந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதற்கிடையில், நீர்மூழ்கி கப்பல் ஊழல் மற்றும் விபரம் வெளியிடப்படாத மற்றொரு ஊழல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்குமாறு அந்நாட்டின் தலைமை அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.
2003 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நேதன்யாகுவும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதற்கான செலவுகளை பிரபல அழகுசாதனங்கள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான நேதன்யாகுவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஏற்றுகொண்டதாகவும், அதற்கு பிரதி உபகாரமாக அரசு இயந்திரத்தின் மூலம் சில சலுகைகளை அவர் அளித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதுதவிர, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றதாகவும் அவர்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். மேற்கண்ட ஊழல் புகார்கள் தொடர்பாக சுமார் 50 சாட்சிகளிடம் இஸ்ரேல் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பிரதமர் நேதன்யாகுவின் வீட்டுக்கு வந்த போலீஸ் படையினர், அவரிடம் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.