குமரி மாவட்டத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி நிதிநிறுவனங்களின் மூலம் பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலி நிதி நிறுவனங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டாலும் இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனம் ஒன்று அதன் கிளைகளை குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் செயல்படுத்தி வந்தது. இந்த நிறுவனத்தில் பொது மக்கள் பணத்தை முதலீடு செய்தால் பணம் முதிர்வடைந்த பிறகு வீட்டு மனைகள், விவசாய நிலங்கள் முதலீடுதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் பொது மக்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாகவும், தேவைப்படும்போது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிதி நிறுவனம் கூறியதால் ஏராளமானோர் அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வுகாலம் வந்த பிறகு அவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் அருப்புக்கோட்டையை சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மனைவி மீனா (வயது 58) என்பவரும் பணத்தை முதலீடு செய்திருந்தார். அவருக்கும் முதிர்வு காலத்திற்கு பிறகு பணம் வழங்கப்படவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மீனா இதுபற்றி மதுரை புறநகர் போலீசில் புகார் செய்தார். நிதி நிறுவன இயக்குனர்கள் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள பத்ரகாளி விளையை சேர்ந்த நல்லபெருமாள், அருவிக்கரை அருகே உள்ள குழித்தராயன்விளையை சேர்ந்த ரகுராமன், நாகர் கோவில் ஆசாரிப் பள்ளத்தை சேர்ந்த கில்பர்ட் ஜேம்ஸ், மேல சங்கரன்குழியை சேர்ந்த வசந்தகுமாரி, பழவிளையை சேர்ந்த ஜெயசோபா, பத்மநாபபுரத்தை சேர்ந்த நடராஜன் ஆகிய 6 பேர் மீது புகார் செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பலரும் இவர்கள் மீது புகார் கூறினார்கள். இவர்கள் குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ரூ.2 கோடி வரை பலரிடமும் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.புகார் கூறப்பட்டவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த தகவலை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனுக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவுபடி குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. பால்துரை தலைமையிலான போலீசார் இந்த மோசடி பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் நல்ல பெருமாள், ரகுராமன், கில்பர்ட்ஜேம்ஸ் ஆகியோர் சொகுசு காரில் வந்த போது நாகர்கோவிலில் வைத்து குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. பால் துரை தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களை நாகர்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்திவிட்டு மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் அசல் ஆவணங்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.