விவசாயிகள் தற்கொலையை தடுக்க கோரி கும்பகோணத்தில் 10-ந்தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் பதவிகளை தக்க வைக்க போராடுவது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் உழவர்களின் உயிரிழப்புகள் வழக்கமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 84 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்திருக்கின்றனர்.
நேற்று ஒரே நாளில் 10 விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலும் நடந்து வந்த உயிரிழப்புகள் இப்போது தெற்கில் தூத்துக்குடி மாவட்டம் வரையிலும், வடக்கில் திருவண்ணாமலை மாவட்டம் வரையிலும் நீண்டிருக்கின்றன. திருண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் மண்ணு என்ற விவசாயி அதிர்ச்சியிலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் முருகன் என்பவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட ஏமாற்றமும், விரக்தியும் தான் அவர்களின் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவாவது உதவி செய்து கைத்தூக்கி விடுவதன் மூலம் தான் அவர்களை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 10-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.எனது தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.