கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

249 0

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர். சென்னைக்குத் தண்ணீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டத்தில் உள்ள சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம், இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னைக்கு ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பராமரிப்புப் பணி நடந்தது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வடிகட்டப்பட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக காவிரி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, அது கீழணைக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஒரு மாதமாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, இன்று (ஆக. 24) விநாடிக்கு 1,652 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட வருகிறது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து ஏரி நிரம்பி அதன் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.

சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் அதிகப்படுத்தப்பட்டு, விநாடிக்கு 52 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரி நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி ஆகியோர் கூறுகையில், “ஏரி நிரம்பியுள்ளதால் ஏரியின் கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்குத் தொடர்ந்து தேவையான அளவுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். விவசாயிகளின் தேவைக்குத் தண்ணீர் தரப்படும்” என்றனர்.