மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

302 0

c9461814-fbe3-44ff-8bac-5cfab77260d7_l_styvpfஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது.

இதனை இந்த ஆண்டாவது பொங்கல் பண்டிகையின்போது நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், காளை வளர்ப்போரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு எப்படியும் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மாடுபிடி வீரர்களும், போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மத்திய அரசு சிறப்பு ஆணையிட்டு அனுமதி அளித்த பிறகும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு அதுபோன்ற சூழல் ஏற்படாத வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

எனினும் ஜல்லிக்கட்டு நடைறெ உரிய சிறப்பு அறிவிப்பு எதையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம் ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து வருகிறார்.இந்த சூழலில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, அதனை நடத்த அனுமதி அளிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அலங்காநல்லூரில் ஜனவரி 3-ந்தேதி (இன்று) மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தாங்களும் பங்கேற்போம் என காங்கிரஸ் கட்சியும் அறிவித்தது. இதனை தொடர்ந்து அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே மதுரை வந்து விட்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் அவர், காரில் அலங்காநல்லூர் புறப்பட்டார். அவருக்கு கடச்சனேந்தல், ஊமச்சி குளம், அச்சம்பட்டி என வழிநெடுகிலும் கட்சியினர் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து மேடைக்கு மு.கஸ்டாலின் வந்ததும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் இதில் கலந்து கொண்டனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக மேடை பகுதியில் போலீஸ் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.