கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

188 0

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் இதனை அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும்.

அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்.

அரைநூற்றாண்டு காலத்துக்கு தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர். 13 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தலைகுனியாதவர். 80 ஆண்டு கால வாழ்க்கையில் 60 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. தோல்வி அவரைத் தொட்டதே இல்லை.

அவர் இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞாநி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைக் கொடுத்தவர்.

இவ்வாறு அவர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.