ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜெர்மனி அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

207 0

ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அங்குள்ள கள நிலவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்களை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
தலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மெர்கலுடனான இந்த பேச்சு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் இன்று (நேற்று) மாலையில் பேசினேன். அப்போது ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிலவரங்கள் உள்பட இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இந்தியா-ஜெர்மனி தந்திரோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்’ என பதிவிட்டிருந்தார்.