கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பு

174 0

கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குறைந்தது இருவாரங்களுக்காவது ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு தொடர்ந்து கருத்துரைத்த அவர், கொரோனா வைரஸ் பரவலை நாட்டில் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை குறைந்தது இருவாரங்களுக்கேனும் நீடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இருவாரங்களுக்கு குறைவாக அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டத்தால் எந்தவிதமான பிரயோசனங்களும் இல்லை. கொரோனா வைரஸ் நிலைமைகளால் நாடு பாரிய ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளது. நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவாகி வருகின்றன எனவும் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க போராடும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானங்களே இந்நிலைமைக்குக் காரணம். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காது ஜனாதிபதி புறக்கணித்தார். இதனால், நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் சடலங்கள் மலைபோல குவிவதைத் தடுக்க வேண்டும் என்றால், நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென நிபுணர்களின் கூறியபோது, அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பில் போலியான கருத்துக்களை முன்வைத்து அதனை புறக்கணித்ததாகவும் கூறினார்.