அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
மேலும் அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் எடுக்கும் பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அரசாங்கம் எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கின்றது, எந்த கட்சியின் அரசாங்கம் என்பது பற்றியெல்லாம் அரச அதிகாரிகள் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புது வருடத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.மேலும் அரச சேவைகளை விட அரசசார்பற்ற அமைப்புகள் பலமாக உள்ளன. அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிகள் மற்றும் செயற்பாடுகளை அரசசார்பற்ற நிறுவனங்களும், ஊடகங்களும் கண்காணித்து வருகின்றன.
இதனால், அரச ஊழியர்கள் இந்த புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டும். நான் அரசியலுக்கு வந்த காலத்தில் இணையத்தளமோ பேஷ்புக்கோ இருக்கவில்லை.எங்கோ தூர நாடு ஒன்றில் இருந்து இணையத்தளத்தை வைத்திருக்கும், பேஷ்புக்கை ஹெக் செய்ய கூடிய இழிவான சிலரே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
அவர்கள் தீர்மானங்களை எடுக்கவும் சேறுபூசும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல்வாதிகளும் அரச ஊழியர்களும் அவற்றில் சிக்கிக்கொள்கின்றனர் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.