ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்!

198 0

ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை தலிபான்கள் வீடுவீடாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து டாயிஷ் வில்லேவின் இயக்குநர் பீட்டர் லிம்பார்க் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆபத்தில் இருக்கிறார்கள்.

காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் தலிபான்கள் முறையாக ஊடகவியலாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நமக்கு நேரம் குறைவாகத் தான் இருக்கிறது’ என கூறினார்.

முன்னதாக நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தலிபான்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக நோர்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள இரகசிய அறிக்கையில் தெரியவந்தது. இது தற்போது உண்மையாகியுள்ளது.