மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 321 பேருக்கு கொரோனா!

199 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஏழு தினங்களில் 2086 கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொற்றாளர்களும் மரணங்களும் அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்கள் சமூகப்பொறுப்புடன் செயற்படுவதன்மூலம் மட்டுமே இந்த நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவோர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிககைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 321 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 பேர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 110 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 43 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்களில் இருவர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும் ஏறாவூர், மட்டக்களப்பு, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் சேர்ந்தவர்களாவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 157 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த ஏழு தினங்களில் 2086 கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது புதிதாக தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்துவருகின்றன. மக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் மட்டுமே கொவிட் பரம்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். தேவையில்லாது வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் அல்லது தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எந்தவொரு காரணம்கொண்டும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். உங்கள் அன்றாட தேவைகளை உங்கள் உறவினர்கள் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ பெற்றுக்கொள்ளுங்கள்.

அத்துடன் உங்களுக்குத் தரப்பட்ட வைத்தியரின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். மருந்தகங்களில் கொவிட்19 தொற்றுக்கான மாத்திரைகள் எனக் கேட்டு வாங்க வேண்டாம். உங்களுக்குத் தேவையான மாத்திரைகளையோ மருந்துகளையோ வைத்தியரின் பரிந்துரையின்படி பெற்றுக்கொள்ளுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலசரக்குக் கடைகளில் மக்கள் கூட்டங்கூட்டமாக நிற்பதை அவதானிக்க முடிகின்றது. அதனை தவிர்த்து சமூக இடைவெளியைப் பேணுங்கள். முகக் கவசங்களை சரியான முறையில் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள்.

கூட்டங்கூடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதனை மீறுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்