மக்களின் வீடுகளில் இருந்து வெளியேற மறுக்கும் பொலிஸார் நடுத்தெருவுக்கு வந்த காங்கேசன்துறை மக்கள்

354 0

kksகாங்கேசன்துறை பகுதியில் பொது மக்களுடைய காணிகளை கையகப்படுத்தி நிலை கொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக் காணிகள் வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொலிஸார் நிலை கொள்ள கீரிமலையில் உள்ள காணிகளின் ஒரு தொகுதிக் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் மக்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு பொலிஸார் சாட்டுப் போக்குகளை தெரிவித்து வருகின்றார்கள்.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அண்மையில் 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காங்கேசன்துறைப் பகுதியில் மட்டும் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதும் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவான பிரதேசங்களையும், அங்குள்ள பொது மக்களின் வீடுகளிலும் பொலிஸாரே நிலை கொண்டுள்ளனர்.

குறிப்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் பணிமனை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான விடுதி, நூலகம், வைத்திய சாலை, வாகனப் பழுது பார்க்கும் இடம், சிற்றுண்டிச்சாலைகள், வாகனத்தரிப்பிடங்கள் போன்ற தேவைகளுக்கான பொலிஸார் அப்பகுதியில் உள்ள சுமார் 59 வீடுகளையும், அதனுடன் கூடிய காணிகளையும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்கு நிலை கொண்டுள்ள பொலிஸார் விலகிச் செல்லாத காரணத்தினால் மக்கள் அங்கு சென்று மீளக்குடியேறிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

குறித்த பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே அப்பகுதியில் உள்ள பொது மக்களின் காணிகளை விட்டு வெளியேறுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் தமக்கான உரிய மாற்றிடம் வழங்கப்பட்டால் மட்டுமே அங்கிருந்து வெளியேறிக் செல்வோம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கேசன்துறையில் நிலை கொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக் காணிகள் வழங்குவது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்டுவந்த யாழ்.மாவட்டச் செயலகம் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நிலையில் தற்போது காணிகள் இல்லாமல் முகாங்களில் தங்கியுள்ளவர்களுக்க வழங்குவதற்கான தெரிவு செய்யப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் காணிகளில் பொலிஸாருக்கும் ஒரு தொகுதி வழங்குவதற்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி கீரிமலைப் பகுதியில் இனங்காணப்பட்ட 2 தொடக்கம் 4 ஏக்கர் காணிகள் பொலிஸாருக்காக வழங்குவதற்கும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த காணிகள் பள்ளமாக உள்ளதால் அப்பகுதியினை மண் போட்டு நிரவ வேண்டியுள்ளதால் அதற்கு பெரும் தொகை பணம் செலவிட வேண்டியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணியில் பொலிஸாருக்குத் தேவையான கட்டங்களை அமைத்துக் கொண்ட பின்னரே காங்கேசன்துறைப் பகுதியினை விட்டு தாம் வேளியேறுவோம் என்றும் பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறைப் பகுதியில் இருந்து பொலிஸார் வேளியேற்றப்பட்டு அப்பகுதியில் பொது மக்கள் மீள்குடியேற்றப்படும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறினிலையிலேயே இருந்து வருகின்றது.