உலகம் முழுவதிலும் 122 செய்தியாளர்கள் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் கொலை, வெடிகுண்டு தாக்குதல் மற்றும் திட்டமிட்டவகையில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய 29 பேரும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 20 பேர் வானுர்தி விபத்துக்களால் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களில் அதிகமான பத்திரிகையாளர்கள் ஆபிரிக்கா, ஆசியா பசுபிக், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அதிகபட்சமாக ஈராக்கில் 15 பேரும், ஆப்கானிஸ்தானில் 13 பேரும், மெக்சிகோவில் 11 பேரும் பலியாகினர்.
இதேவேளை, யெமன், கவுதமாலா, சிரியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பத்திரிகையாளர்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்கள் படுகொலை சற்று குறைந்துள்ள போதிலும், பத்திரிகையாளர்கள் மீதான உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.