ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும்

167 0

ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை வைத்தியர் எம்.ஆதவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெல்டா திரிபு மிக வேகமாக பரவி வருகின்றது. முதலில் கண்டறியப்பட்ட கோவிட்டை விட டெல்டா இரண்டு மடங்கு வீரியமாக பரவக்கூடியது.

ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும். கொழும்பு வைத்தியசாலைகளில் தொற்று நிலைமை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதனால் வைத்தியசாலைகளின் பராமரிக்கும் திறனுக்கு மேலாக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நோயாளர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்தால் யாழ்ப்பாணத்திலும் இந்நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

எனவே இதனை நாங்கள் குறைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தனிநபரும் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி, வீட்டிலிருந்து அநாவசியமாக வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏதாவதொரு காரணத்துக்காக வெளியில் வந்தால் போதிய சமூக இடைவெளியை பேணி எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை சரியாக அணிந்திருத்தல் அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.