நீதியின்றி இழுபடும் திருகோணமலை மாணவர்கள் படுகொலை!

314 0

trinco5-720x480-720x450க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மிலேச்சத்தனமாகச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரியுள்ளனர்.

மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களும் கடற்கரையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை சிறீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும், காவல்துறையினரும் மறுத்து வந்ததுடன், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்கமுற்றபட்ட சமயம் கைக்குண்டு வெடித்தே இவர்கள் அனைவரும் பலியாகினர் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கிட்ட நின்று துப்பாக்கியால் சுடப்பட்டமை வைத்தியப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2013 ஆண்டு ஜுலை 5ஆம் நாள் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் நாள் கைது செய்யப்பட்ட அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறெனினும் அப்பாவி மாணவர்கள் மீதான இப்படுகொலைகள் இடம்பெற்று 11 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.