வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள வனப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களிடம் ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வனஜீவராசிகள், சுற்றாடல், வன பாதுகாப்பு மற்றும் வனவள அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களை அழைத்து, வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லையை விரிவுப்படுத்துமாறும் தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எல்லை விஸ்தரிப்பு தொடர்பில புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றையும் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் தான் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இயற்கை வள வன பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை வனவள அழிப்பு நடவடிக்கைகளின் பின்னால், வர்த்தகர்கள் உள்ளதராகவும், இந்த குற்றங்களை தடுப்பதற்காக முப்படைகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.