இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியலாம்! குழந்தை மருத்துவ நிபுணர்

162 0

குழந்தைகளுக்கு கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கணேசலிங்கம் அருள்மொழி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில்  கோவிட் தொற்று குறைந்து அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளையும் அதிகளவில் பாதிக்கின்றது. குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் நிலைமை தொடர்பில் தாய் தன் முதல் மருத்துவராக கருதப்படுகின்றாள்.

ஏனெனில் குழந்தையின் நடமாட்டம் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் வித்தியாசமான செயற்பாடுகளை உடன் அறிந்து கொள்பவளாக தாய் தான் விளங்குகின்றாள்.

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உலக நாடுகள் சிலவற்றில் மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு கோவிட்  தொற்று ஏற்பட்டால் குழந்தையில் சோர்வு, சிறுநீர் வெளியேறும் அளவு குறையும், நீர் ஆகாரங்களில் விருப்பமின்மை, வாந்தி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஆகியன அறிகுறிகளாகக் காணப்படும்.

ஆகவே இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.