இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்கக் கட்டிகள் தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து இராமேசுவரம் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி அதிகாரிகள் சனிக்கிழமை நள்ளிரவு இராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது உச்சிப்புளி ரயில்வே கடவு பகுதி வழியாக வந்த ஒரு காரில் சாரதியின் இருக்கைக்கு அடியில் இருந்து தலா 100 கிராம் எடையுள்ள 87 தங்கக் கட்டிகள் (8.7 கிலோ) கைப்பற்றப்பட்டுள்ளன.
24 கரட் சுத்தத் தங்கமான குறித்த தங்கக் கட்டிகள் அனைத்தையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, அவரது பெயர் முஜிபுர் ரகுமான் (31) என்பது மட்டுமே தெரியவந்தது என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், தங்கக் கட்டிகளை யார் கொடுத்து அனுப்பியது, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார் என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், இலங்கையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் இந்த தங்கம் இராமேசுவரம் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.