சுபோதினி அறிக்கையை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது?

184 0

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவிக்குமாயின் , அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும். அவ்வாறில்லை எனில் தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும் என்று இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் பராக்கிரம வீரசிங்க தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
அதிபர் – ஆசிரியர்களால் பணிபகிர்ஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு 32 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் எவ்வித தேவையும் அற்ற வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

வரலாற்றிலும் இவ்வாறே இடம்பெற்றது. வெவ்வேறு தீர்வுகளும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டு அவை மீண்டும் மீண்டும் காலதாமதமாக்கப்பட்டு வந்தன. தற்போதும் அதுவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கம் அமைச்சரவை உப குழுவிடம் சுபோதினி அறிக்கையையே சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை எமது சகல தொழிற்சங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனை நடைமுறைப்படுத்த மீண்டுமொரு அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டு , தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதானது மீண்டும் காலதாமத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகவே அமையும்

இதனால் மாணவர்களும் பெற்றோருமே பாதிக்கப்படுகின்றனர். இந்த அரசாங்கம் உண்மையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது அன்புடையது என்றால் நாம் இணக்கம் தெரிவித்துள்ள யோசனையை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த வரவு – செலவு திட்டம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமெனில் , இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதையாவது எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு தெளிவுபடுத்தினால் எம்மால் அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றை எட்ட முடியும். இணக்கப்பாடு எட்டப்பட்டால் எமது தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வர முடியும். அவ்வாறில்லை என்றால் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.