அண்ணாமலை பல்கலை. சட்டப்படிப்பை நடத்த முடியாது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

173 0

அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை நடத்த முடியாது எனசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டு, 2 ஆண்டுகளுக்கான சட்டப்படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்கஅண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அகில இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை அண்ணாமலைப் பல்கலை. நடத்தி வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதேபோல அகில இந்திய பார் கவுன்சில் தரப்பில், இவ்வாறுதொலைதூரக் கல்வி மூலமாகசட்டப்படிப்புகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைகழகத்துக்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என யுஜிசி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், அகில இந்திய பார் கவுன்சில்விதிகளைப் பின்பற்றாமல், அண்ணாமலைப் பல்கலை., சட்டப்படிப்புகளை நடத்த முடியாது எனவும், இந்த படிப்புகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும், ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,சட்டப்படிப்புகளை வழங்கும்போது, அனைத்து பல்கலை.களும் அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.