பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன்

275 0

201701021031426850_i-planned-killed-professor-and-commit-suicide-arrested-youth_secvpfகாதலிக்க மறுத்ததால் பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அனுகெயின்சி (வயது 25). நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரை நித்திரவிளை பூந்தோப்பு காலனியைச் சேர்ந்த பெஜி காஸ்ட்ரோ (27) என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். அனுகெயின்சியை சந்தித்து பலமுறை தனது காதலை பெஜி காஸ்ட்ரோ வெளிப்படுத்தினார். ஆனால் அனுகெயின்சி காதலை ஏற்காமல் இருந்தார்.

இந்தநிலையில் அனுகெயின்சிக்கும், வேறொரு வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயித்தனர். அவர்கள் திருமணம் வருகிற 5-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

இதையறிந்த பெஜி காஸ்ட்ரோ அதிர்ச்சி அடைந்தார். தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என எண்ணிய அவர் அனுகெயின்சியை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைக்காக அனுகெயின்சி செல்வதை பெஜி காஸ்ட்ரோ நோட்டமிட்டார். பிரார்த்தனை முடிந்து திரும்பும்போது அவரை கொல்ல முடிவு செய்து ஆலயத்துக்கு வெளியே பதுங்கி நின்றார்.

பிரார்த்தனை முடிந்து தோழிகளுடன் நடந்து வந்த அனுகெயின்சியை வழிமறித்து பெஜி காஸ்ட்ரோ சரமாரியாக குத்தினார். இதில் அனுகெயின்சி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உயிருக்கு போராடிய அவரை ஆலயத்துக்கு வந்தவர்கள் மீட்டு நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அனுகெயின்சியை கத்தியால் குத்திய பெஜிகாஸ்ட்ரோவை அந்த பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பெஜி காஸ்ட்ரோ குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பெஜிகாஸ்ட்ரோ போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

அனுகெயின்சியை நான் தீவிரமாக காதலித்தேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்கவில்லை. எப்படியாவது அவரை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என சுற்றி வந்தேன். இதுதொடர்பாக அனுகெயின்சி என் மீது போலீசில் புகார் செய்தார். போலீசாரும் என்னை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தான் அனுகெயின்சிக்கு வருகிற 5-ந் தேதி திருமணம் நடக்க இருப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அதனால் அவரை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஆலயத்துக்கு வெளியே காத்து நின்றேன். அனுகெயின்சி ஆலயத்தில் இருந்து வெளியே வந்தபோது கூட்டத்தோடு கலந்து சென்று அவரை கத்தியால் குத்தினேன். பிறகு நானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் பொதுமக்கள் சுற்றி வளைத்து என்னை தாக்கியதால் எனது தற்கொலை முயற்சி பலனிக்காமல் போய் விட்டது. போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அனுகெயின்சிக்கு பெஜி காஸ்ட்ரோ காதலிக்க வற்புறுத்தி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். தொல்லை அதிகரிக்கவே பெஜி காஸ்ட்ரோ மீது அனுகெயின்சியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் 5 முறை புகார் தெரிவித்துள்ளார். இதில் ஒருமுறை மட்டுமே பெஜி காஸ்ட்ரோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் அனுகெயின்சி திருமணம் ஆகும் வரை அவர் பக்கமே செல்லக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். அதன்பிறகு பெஜி காஸ்ட்ரோ கொச்சிக்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். அனுகெயின்சிக்கு திருமணம் என்றதும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஊருக்குள் வந்து அவரை கொல்ல முயன்றுள்ளார்.

பெஜி காஸ்ட்ரோ ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றவர் ஆவார். ஒரு முறை வடசேரி பஸ் நிலையத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மற்றொரு முறை மார்த்தாண்டத்தில் வி‌ஷம் குடித்துள்ளார். பின்னர் ஒரு முறை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தநிலையில் தான் அனுகெயின்சியை கத்தியால் குத்தி விட்டு மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.