ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது மாடு வளர்ப்போர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது
ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாளை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை வருகிறார். நாளை காலை அலங்காநல்லூர் செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு கடச்சனேந்தல் உள்ளிட்ட 12 இடங்களில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.