அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை- வானதி சீனிவாசன் கண்டனம்

186 0

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொங்கு மண்டல பகுதிக்கு அதிக திட்டங்களை கொண்டு வருவதற்காக முன்னெடுப்பு செய்திருக்கிற முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க. செயல்பட்டு வந்தது. ஆட்சிக்கு வந்தால் எஸ்.பி. வேலுமணியின் அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்று தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தின்போது பேசி வந்தார்கள்.

தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி கூட தி.மு.க. பெற முடியாத சூழல் ஏற்பட்டதற்கு எஸ்.பி. வேலுமணி தான் முக்கிய காரணம் என்பதால் அவர் மீது புகார் ஏற்பாடு செய்து சோதனை நடத்தியுள்ளனர். இது முழுக்க, முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியான நடவடிக்கையாகும்.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது நிரந்தரம் கிடையாது. இதை வைத்துக் கொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்குகின்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும், அந்த வெற்றிக்கு தடையாக இருப்பவர் வேலுமணி என்ற காரணத்தினால் அவரது மனரீதியான உறுதியை குலைப்பதற்காகவும், அவரின் சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் அவருக்கு தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தியுள்ளது தி.மு.க. அரசு. இதுபோன்று அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.