உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

274 0

201701021044421397_ramadoss-request-should-hold-civic-polls_secvpfமார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றிருக்க வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், அதில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைக் காரணம் காட்டி அதை ரத்து செய்தார். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் ஆணையிட்டார்.

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின் 3 மாதங்கள் அவகாசம் இருந்ததால் நீதிபதியின் வழி காட்டுதல்படி டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், செயல்படாத அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்த உயர்நீதிமன்றம், புதிதாக தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், அந்த தீர்ப்பை ஏற்க மறுத்த தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று அக்டோபர் 18-ஆம் தேதியும், நவம்பர் 15-ஆம் தேதியும் கூறிவிட்ட நிலையில், அதன்பிறகாவது மாநில தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு புதிதாக தொகுதி மறுவரையறை செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி செய்திருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு செய்ய அரசும், தேர்தல் ஆணையமும் தவறி விட்டன.

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா அல்லது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்புக்காக காத்திருக்குமா? என்பது தெரியவில்லை.

இவற்றில் இரண்டாவது வழியை அரசு தேர்வு செய்தால் அது தொடர் கதையாக நீளும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் கூட உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வாய்ப்பில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அதிகாரிகள் ஆட்சி செய்ய ஏற்படுத்தப்படவில்லை. இதை உணர்ந்து மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் தலையீடின்றி செயல்பட வசதியாக அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசு இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.