முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தரவேண்டும் என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நல்லதண்ணீர்த்தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரைக்குமான சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளைக் கொண்ட கடற்பகுதிகளிலும் நாயாறு வட்டுவாகல் ஆறு உள்ளிட்ட சிறுகடல் பகுதிகளிலும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், “வட்டுவாகல் ஆறு கொக்கிளாய் ஆறு ஆகிய சிறுகடல் பகுதிகளில் அனுமதியற்ற சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்படுவதனால் தமது தொழில் நடவடிக்கைக்காக முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என தொடர்ந்தும் மீனவர்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனை விட, முல்லைத்தீவு கடல் பகுதிகளில் முறையற்ற வகையில் கரை வலைப்பாடுகளுக்காக அனுமதிகள் வழங்கப்பட்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலைப்பாடுகளை இழுத்தல் டைமைற் பாவித்து மீன்பிடித்தல், வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல், நிபந்தனை மீறிய அட்டைத்தொழில்கள் என பல்வேறு சட்டத்துக்கு முரணான தொழில் நடவடிக்கைகள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமாசத்தில் தலைவர் ஏ.மரியராசா, மலர்ந்துள்ள புதிய ஆண்டிலாவது, முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்ளுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தித்தரப்படவேண்டும்.
இந்தநிலை தொடர்ந்தும் ஏற்படுமாக இருந்தால் மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அவர் கூறியுள்ளார்